புதுடெல்லி: இந்திய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் இம்முறை பங்கேற்கவில்லை. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொத்தம் 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடு தழுவிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்ளத் தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் நேரங்களில் மட்டும் ஒன்றிணைவதைத் தவிர்த்து, இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக கூட்டணித் தலைவர்கள் அவ்வப்போது நேரில் சந்தித்து ஆலோசிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசின் சில குறிப்பிட்ட கொள்கைகள், புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மாணவர் நலன், ஜனநாயகப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசுக்கு எதிராக கூட்டான எதிர்ப்பைப் பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை, வாக்குக் கொள்ளை தொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்புவது என்றும் அக்கடிதம் விரைவில் அனுப்பப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டதாக திரு கார்கே கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நீட், சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்துவது என இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக திரு கார்கே மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது இண்டியா கூட்டணியில் ஒற்றுமை நிலவவில்லை. இதனால் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தன.
இனி வரவிருக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்க ஏதுவாக, முன்கூட்டியே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, ஆலோசனைக் கூட்டத்தின்போது மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கவும் தங்களின் கூட்டுப் போராட்டம் தொடரும் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் அறிவித்தனர். இதனிடையே, ‘முதுகில் குத்திய காங்கிரஸ்’ என்ற கடுமையான வார்த்தைகள் அடங்கயி பதாகைகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

