ஹைதராபாத்: கோவில் தேரோட்டத்தின்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் ஐந்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி (கிருஷ்ண ஜெயந்தி), தெலுங்கானா மாநிலம், ராமந்தபூர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில், கிருஷ்ணர் சிலையை வைத்து தேரோட்டம் நடைபெற்றது.
ஆண்டுதோறும், ஸ்ரீ கிருஷ்ண ஷோப யாத்ரா என்ற பெயரில் இந்தத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்தத் தேரை இளையர்கள் பலர் ஒன்றுசேர்ந்து இழுத்துச் சென்றனர். உள்ளூர் மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்தத் தேரோட்டம் நள்ளிரவு வேளையில் நடைபெற்றதாகவும் அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அந்தத் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் ஐந்து பேர் மாண்டுபோயினர். மேலும், காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
“தேரோட்டம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அதன் சக்கரப் பகுதி உடைந்துபோனது. இதையடுத்து, தேரை பக்தர்கள் சிலர் தங்கள் தோளில் சுமந்து செல்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிலர் தேரைச் சுமந்து சென்றனர்.
“கோவிலில் இருந்து ஏறக்குறைய 200 மீட்டர் தூரத்தில் தேர் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின் கம்பத்தில், தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருந்த மின் கம்பியில் உரசியது. இதையடுத்து, ஒன்பது பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர்,” என்று உப்பல் பகுதி காவல் ஆய்வாளர் பாஸ்கர் தெரிவித்தார்.
இத்துயரச் சம்பவத்தில் கிருஷ்ணா யாதவ் (21), சுரேஷ் யாதவ் (34), ஸ்ரீகாந்த் ரெட்டி (35), ருத்ரா விகாஸ் (39), ராஜேந்திர ரெட்டி (15) ஆகியோர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்த உப்பல் காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.