மிலான்: இத்தாலியின் மிலான் நகரிலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
அதன் காரணமாக அந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்காக இந்தியா திரும்பவிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இத்தாலியில் சிக்கித் தவித்தனர்.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மிலானிலிருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏஐ138 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது என்றும் பயணிகள் அனைவருக்கும் தங்குமிட ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு எர் இந்தியா வருத்தம் தெரிவித்தது. மேலும், அனைத்து பயணிகளுக்கும் உணவு உட்பட தேவையான எல்லா உதவிகளையும் தாங்கள் வழங்குவதாக ஏர் இந்தியா சொன்னது.