நடுவானில் 4 மணி நேரம் வட்டமடித்தபின் திருப்பிவிடப்பட்ட விமானம்

நடுவானில் 4 மணி நேரம் வட்டமடித்தபின் திருப்பிவிடப்பட்ட விமானம்

2 mins read
பெங்களூரில் தரையிறங்கியது
0ffd2998-9135-41ac-9fe3-07c85d0ee436
‘ஃபிளை91’ நிறுவனத்தின் ‘ஐசி3401’ விமானத்தை பெங்களூருக்குத் திருப்புமாறு பயணிகள் வலியுறுத்துவதைச் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியில் கேட்க முடிந்தது. - படம்: விக்கிப்பீடியா

பெங்களூரு: ஹைதராபாத்திலிருந்து ஹுப்பள்ளிக்குச் சென்ற ‘ஃபிளை91’ ஏர்லைன்ஸ் விமானம் (IC3401), மோசமான வானிலை காரணமாகக் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடுவானில் வட்டமடிக்க நேரிட்டது.

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், ஹுப்பள்ளியில் மாலை 4.30 மணிக்குத் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஹுப்பள்ளியை நெருங்கியபோது வானிலை மோசமானதால் விமானிகள் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டனர்.

இதனால் அச்சமடைந்த பயணிகள், அழுது, பிரார்த்தனை செய்ததைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. விமானத்தை பெங்களூருக்குத் திருப்புமாறு பயணிகள் வலியுறுத்துவதை அவற்றில் கேட்க முடிந்தது.

இந்நிலையில், பயணிகளின் குடும்பத்தினர், விமான நிறுவனம் சரியான தகவல்களை வழங்கவில்லை என்றும் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், விமானத்தில் எந்தத் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை எனவும் மோசமான வானிலை காரணமாகவே நிலையான நெறிமுறைகளின்படி விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் ‘ஃபிளை91’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளப்படவில்லை என்று அது உறுதியளித்தது. தனது விமானிகள், விமானச் சிப்பந்திகள், விமான நிலைய ஊழியர்கள் நெருக்கடிகளைக் கையாளும் திறன் பெற்றவர்கள் என்பதையும் ‘ஃபிளை91’ நிறுவனம் பாதுகாப்பு தொடர்பில் குறைகூற இயலாத பதிவுகளைக் கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, விமானம் இரவு 7.30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இந்தச் சம்பவம் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்