கத்ரா அணையில் மிதக்கும் சூரியமின் உற்பத்தி திட்டம்: 100 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு

கத்ரா அணையில் மிதக்கும் சூரியமின் உற்பத்தி திட்டம்: 100 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு

கோப்புப்படம்: டெக்கான் ஹெரால்ட்

22 Sep 2026 - 4:16 pm

2 mins read

கார்வார்: மழைப்பொழிவு குறைவு காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் சரிந்து, நீர்மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், கர்நாடகாவின் கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கத்ரா அணையின் பின்புற நீர்த்தேக்கத்தில் (Backwaters) மிதக்கும் சூரிய மின் உற்பத்திப் பூங்கா அமைக்கும் திட்டம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

கர்நாடக மின் கழகம், தெஹ்ரி நீர் மின் வளர்ச்சிக் கழகம் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தின் மூலம் 100 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கத்ரா நீர்மின் நிலையத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட மூன்று பிரிவுகள் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மிதக்கும் சூரியமின் திட்டப் பணிகளும் நிறைவடையும் பட்சத்தில், மொத்த உற்பத்தித் திறன் 250 மெகாவாட்டாக உயரும்.

நீர்த்தேக்கத்தின் ஆழம், அமைப்பை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நடத்திய சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இத்திட்டம் செயல்படத் தொடங்கினால், ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் டன் பசுமைக்குடில் வாயு உமிழ்வு (Greenhouse Gas Emissions) குறைக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காளி ஆற்றின் குறுக்கே உள்ள மற்ற அணைகளை விட கத்ரா பகுதியில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சூரியமின் உற்பத்திக்கு இது மிக உகந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நீர் ஆவியாவதைத் தடுப்பதுடன், நிலத்தேவை இன்றி கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இத்திட்டம் பெருமளவில் உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்