கௌகாத்தி: வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் பெய்துவரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அதனால் 45,000க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். தேவையான ஆதரவை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
வெள்ளத்தால் தேமாஜி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 41,000க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். ஜோனாய் பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
மொத்தம் 257 சிற்றூர்களும் 4,278 ஹெக்டர் வேளாண் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 துயர்தணிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 655 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51,900 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்கள் நேரில் அனுப்பப்பட்டுள்ளனர்.
சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

