ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெருமழை கொட்டித் தீர்ப்பதால் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 11 பேர் உயிரிழந்துவிட்டதாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால், பாலங்கள் பல இடிந்துவிழுந்தன; வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில், ரம்பான், ரியாசி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் 11 பேர் மாண்டுவிட்டதாக உள்ளூர்ப் பேரிடர் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் எழுவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஐந்து வயதுக் குழந்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த 27ஆம் தேதி ஜம்முவின் வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 41 பேர் கொல்லப்பட்டனர்.
அன்றைய நாளில் ஜம்முவில் 296 மில்லிமீட்டர் மழையும் உதம்பூரில் 629.4 மில்லிமீட்டர் மழையும் கொட்டித் தீர்த்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இவை இரண்டும் புதிய சாதனை எனக் கூறப்பட்டது.
நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; கிட்டத்தட்ட 50 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதமடைந்துவிட்டன.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (என்எச்44) தொடர்ந்து நான்காவது நாளாக வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டது.