வெள்ளம், நிலச்சரிவு: இந்தியாவில் ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்

வெள்ளம், நிலச்சரிவு: இந்தியாவில் ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்

1 of 2
படம்: ஏஎஃப்பி
படம்: ராய்ட்டர்ஸ்

05 Aug 2026 - 6:51 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் ஜூலை மாதத்திலிருந்து பெய்துவரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிகாரத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குக் குறைந்தது 87 பேர் இறந்துவிட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்கு மட்டும் 47 பேர் மாண்டுவிட்டனர். துயர்தணிப்பு, மறுவாழ்வுப் பணிகளுக்குப் பொதுமக்கள் நிதியுதவி அளிக்குமாறு மாநில அரசு கோரியுள்ளது.

“அசாமில் ஏற்பட்டுள்ள பேரழிவு இதற்குமுன் அப்பகுதிகள் கண்டிராத ஒன்று. பொருளிழப்புகளை ஈடுகட்ட முடியும். ஆனால், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுவோர்க்கு எந்த இழப்பீடும் ஈடாகாது,” என்று திரு சர்மா தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு குறைந்தது 26 பேர் பலியாகிவிட்டனர்; நால்வரைக் காணவில்லை.

மழை காரணமாக 27,000க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளைவிட்டு வெளியேறியுள்ளதாக மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

இமயமலைப் பகுதியான ஜம்மு - காஷ்மீரில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இலங்கையிலும் கனமழை

இதனிடையே, அண்டை நாடான இலங்கையிலும் கனமழை காரணமாகத் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் அங்குக் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துவிட்டனர்.

நாட்டின் மத்தியப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 12,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அதேவேளையில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால், அதிகாரிகள் லாரிகள்மூலம் குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர்.

அண்மைய தீவிர வானிலை மாற்றங்களுக்கு எல் நினோவே காரணம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்