உணவு எச்சரிக்கை முத்திரை: உச்ச நீதிமன்றத்தில் சுகாதார ஆர்வலர்கள் முறையீடு

உணவு எச்சரிக்கை முத்திரை: உச்ச நீதிமன்றத்தில் சுகாதார ஆர்வலர்கள் முறையீடு

2 mins read
de3c4bd7-0cfd-4cac-83a0-3ec8cc51f30a
புதிய திட்டத்தின்படி, உணவு, பானங்களில் சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு ஆகிய மூன்றில் ஏதேனும் இரண்டின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை முத்திரை கட்டாயமாக்கப்படும். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: பெட்டிகள், பைகள் அல்லது கலன்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்களில் அதிகப்படியான இரண்டு ஊட்டச்சத்துகள் இருப்பதைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கை’ முத்திரையிடும் அரசின் புதிய திட்டத்திற்கு இந்தியச் சுகாதார ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உணவு நிறுவனங்களுக்குச் சாதகமான இத்தகைய விதிவிலக்குகள் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தியாவின் பொட்டலமிடப்பட்ட உணவு, பானத் துறையின் மதிப்பு நூறு பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. அரசின் ‘சிவப்பு எச்சரிக்கை’ முத்திரைத் திட்டத்திற்கு அத்துறையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அத்திட்டத்தின்படி, சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு ஆகிய மூன்றில் ஏதேனும் இரண்டின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை முத்திரை கட்டாயமாக்கப்படும்.

ஆனால், சர்க்கரை மட்டும் அதிகமாக இருக்கும் உணவும் நீரிழிவு நோயை உண்டாக்கும் என்பதால், இந்தத் தளர்வு நிறுவனங்களுக்கு மட்டுமே லாபத்தைத் தரும் என்று ‘3எஸ் அண்ட் அவர் ஹெல்த்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராஜீவ் சங்கர் திவிவேதி குறிப்பிட்டார்.

வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமை அம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

உலக அளவில் இத்தகைய உணவு எச்சரிக்கைகள் பொதுச் சுகாதாரத்திற்குப் பயனளித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, சிலி நாட்டில் கொண்டுவரப்பட்ட தனித்தனி எச்சரிக்கை முத்திரைச் சட்டத்தால் சர்க்கரை பானங்களின் விற்பனை 23.7 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்நிலையில், சுகாதார ஆர்வலர்களின் கருத்துகளை மறுத்துள்ள இந்திய அரசுத் தரப்பு, இத்தகைய கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகவே நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அதுபோல், இரண்டாம் கட்டத்தின்போது அக்கறைக்குரிய ஒவ்வோர் ஊட்டச்சத்து குறித்த எச்சரிக்கை முத்திரை இடம்பெறுவது கட்டாயமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021 நிலவரப்படி, இந்தியாவில் 180 மில்லியன் பெரியவர்கள் அதிக உடல் எடையுடன் அல்லது உடற்பருமனுடன் இருந்தனர். வரும் 2040ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 450 மில்லியனாக உயரும் என லான்செட் சஞ்சிகையில் வெளியான ஓர் ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்