மனிதர்களால் உருவாக்கப்பட்ட காஸா பஞ்சம் கொலைக்குச் சமம்: சிவசங்கர் மேனன்

கட்டாயப்படுத்தி காஸாவில் அமைதியை கொண்டுவர முடியாது

3 mins read
308488b0-3f0e-4781-b5a8-b9bcdca23dc9
“உக்ரேன் போராக இருந்தாலும் சரி, காஸா மீதான போராக இருந்தாலும் சரி, அவற்றிற்கான தீர்வுக்குக் குறிப்பிட்ட அந்நாடுகளின் உள்நாட்டு அரசியல்தான் வழிவகுக்கும்,’’ என்று கூறினார் இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். - படம்: இளவரசி ஸ்டீஃபன்

கட்டாயப்படுத்துவதால் காஸாவில் அமைதியை நிலைநாட்ட முடியாது என்றும் மக்களின் ஒப்புதலோடு அது அதிகாரபூர்வமாக மலர்ந்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலாளருமான சிவசங்கர் மேனன்.

சிங்கப்பூரின் மத்திய கிழக்கு ஆய்வுக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2), நடைபெற்ற அனைத்துலகக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய திரு மேனன், பாலஸ்தீனம், இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களைப் பொறுத்தமட்டில் இந்தியா ‘இரு நாடுகள்’ தீர்வுக்கு எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் - காஸா, ரஷ்யா - உக்ரேன் போர்ச் சூழல்களில் இந்தியா உட்பட உலக நாடுகளின் பங்கு, பல மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போர்களால் ஏற்படக்கூடிய  நீண்டகாலத் தாக்கம் போன்றவை குறித்த தமிழ் முரசின் கேள்விகளுக்கு திரு மேனன் பதிலளித்தார்.

‘‘உக்ரேன் போராக இருந்தாலும் சரி, காஸா மீதான போராக இருந்தாலும் சரி, அவற்றிற்கான தீர்வுக்குக் குறிப்பிட்ட அந்நாடுகளின் உள்நாட்டு அரசியல்தான் வழிவகுக்கும்,’’ என்றார் அவர்.

‘‘தற்போது உலக அரங்கில் நிலவும் போர்ச் சூழலைக் கண்டு அமைதியை நாடுவோர் பேரளவில் மனச்சோர்வடைந்துள்ளனர். எனினும் இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளால் வலுக்கட்டாயமாக எதையும் செய்ய இயலாது,’’ என்று திரு மேனன் கூறினார்.

‘‘இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள இஸ்ரேல், ரஷ்யா ஆகியவை சக்திவாய்ந்த நாடுகள். செல்வாக்குமிக்க இந்த நாடுகளின் விவகாரத்தில் அவர்கள் எத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என்பதை மற்ற நாடுகள் வற்புறுத்த முடியாது.

‘‘பேச்சுவார்த்தை, சமாதானம் என எவ்வகை முயற்சியாக இருந்தாலும், அந்தந்த நாடுகள் மனம்வைத்து முயன்றால் மட்டுமே பிரச்சினைகள் முடிவுறும். அதுவரை இந்தியப் பிரதமர் மோடியாக இருந்தாலும் வேறு எந்த நாட்டு அதிபராக இருந்தாலும் மற்றொரு நாட்டின் நிலையை மாற்ற உதவ முடியாது,’’ என்று அவர் சொன்னார்.

காஸா மீதான தாக்குதல், உக்ரேன் மீதான போர் என இவ்விரு விவகாரத்திலும் அமைதியை இருதரப்பினரும் விரும்புவதற்கான எந்த அறிகுறியும் தற்போதைக்குத் தென்படவில்லை என்று குறிப்பிட்ட திரு மேனன், இவை ஏற்படுத்தியுள்ள நீண்டகாலப் பொருளியல் தாக்கங்கள் பெரிதும் அக்கறைக்குரியவை என்றார்.

‘‘பூசல், போர், வரிவிதிப்பு எனப் பல்வேறு அம்சங்களால் உலக நாடுகள் எட்ட வேண்டிய பொருளியல் வளர்ச்சியின் வேகம் குறைந்து, பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சியிலிருந்து அவை மீண்டுவரக் கூடுதல் காலம் எடுக்கும். வர்த்தகமும் பாதிப்படையும்,’’ என்றார் திரு மேனன்.

குறிப்பாகப் புவிசார் கட்டமைப்புகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையற்ற நேரத்தில், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிக உறவைப் பெரிதும் நம்பியிருக்கும் சிங்கப்பூரும் இந்தப் பாதிப்புகளுக்கு விதிவிலக்கன்று என்று அவர் குறிப்பிட்டார்.

காஸாவில் அண்மையில் பஞ்சம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, ‘‘மனிதநேயமற்ற இந்தச் சூழ்நிலை மனிதர்களால் உருவாக்கப்பட்ட இடர்; ஏறத்தாழ இது கொலைக்குச் சமம். இந்நிலை மாற வேண்டும். மக்கள் இத்தகைய கொடுந்துயரிலிருந்து மீள வேண்டும்,” என்று திரு மேனன் வலியுறுத்தினார்.

காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகச் செயல்பட்ட அவர் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார்.

குறிப்புச் சொற்கள்