தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியில் பேசக் கட்டாயப்படுத்தி கேரள மாணவர்கள்மீது தாக்குதல்

2 mins read
காவல்துறையினரும் பொதுமக்களும் சேர்ந்து தாக்கியதாகக் குற்றச்சாட்டு
9f481a79-0d98-4a53-bdee-e04badbd2616
கும்பலுடன் காவல்துறையும் சேர்ந்து அவ்விரு மாணவர்களை அடித்து உதைத்ததாக ஜான் பிரிட்டாஸ் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கேரள மாணவர்கள் இருவரை டெல்லி செங்கோட்டை அருகே காவல்துறையினரும் உள்ளூர்வாசிகளும் சேர்ந்து தாக்கியதாகக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அவர்கள்மீது பொய்யாகத் திருட்டுக் குற்றம் சுமத்தியும் அவர்களை இந்தியில் பேச வற்புறுத்தியும் கேரளப் பாரம்பரிய ஆடை அணிந்ததற்காகக் கிண்டல் செய்தும் துன்புறுத்தியதாகத் திரு பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

ஸாகிர் ஹுசைன் டெல்லி கல்லூரியில் படித்துவரும் அஸ்வந்த், சுதின் கே நாயர் என்ற அவ்விரு மாணவர்களையும் காவல்துறை தாக்கி, அவமானப்படுத்தியதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் செப்டம்பர் 24ஆம் தேதி நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

“திருட்டுக் குற்றம் சுமத்திய கும்பலிடமிருந்து அம்மாணவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல்துறையும் அக்கும்பலுடன் சேர்ந்து அடித்து, உதைத்து, ஆடைகளைக் களைந்து மிக மோசமாக அவமானப்படுத்தியது,” என்று திரு பிரிட்டாஸ் சாடியுள்ளார்.

அம்மாணவர்களின் கைப்பேசிகளைப் பறித்துக்கொண்ட காவல்துறை, குற்றமிழைத்ததாகக் கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாகவும் திரு பிரிட்டாஸ் தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுமக்கள் முன்னிலையில், காவல்துறை வளாகத்திலும் அம்மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அத்தாக்குதலில் பொதுமக்கள் சேர்ந்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது,” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தி அதிகம் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் அவர்கள் பேச முயன்றதால் அவர்களை இழிவாகப் பேசி, அடித்து உதைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கல்வி பயில்வதற்காக வரும் வெளிமாநில மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பெரும்பொறுப்பு டெல்லி காவல்துறைக்கே இருக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு பிரிட்டாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்