வெளிநாட்டு வேலை மோசடி: 70 பேரிடம் ரூ.16.3 மில்லியன் சுருட்டிய பெண் கைது

வெளிநாட்டு வேலை மோசடி: 70 பேரிடம் ரூ.16.3 மில்லியன் சுருட்டிய பெண் கைது

படம்: பிக்சாபே

11 Nov 2026 - 7:10 pm

1 mins read

கொல்லம்: வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 70 பேரிடம் ரூ.16.3 மில்லியன் மோசடி செய்த பயண முகவை நிறுவனப் பெண் இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நீராவில் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘எஸ்ரா குளோபல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ நிறுவனம் இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கூடுதல் சம்பளத்தில் வேலை, விசா பெற்றுத் தருவதாகக் கூறியது.

வெளிநாடு சென்றுப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருந்த இளையர்களிடம் தலா ரூ.400,000 முதல் ரூ.600,000 வரை வசூலித்த அந்நிறுவனம், கடந்த ஈராண்டுகளாக யாருக்கும் விசா பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததோடு, கொல்லத்தில் செயல்பட்டுவந்த அலுவலகத்தை மூடிவிட்டு நிர்வாகிகள் தலைமறைவாகினர்.

பணத்தை இழந்தவர்கள் அஞ்சாலுமூடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 24 வழக்குகள் பதிவாயின.

நீண்டகரை பகுதியைச் சேர்ந்த அந்நிறுவன இயக்குநரான மேரி லோபஸ் என்ற பெண்ணைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

புதுடெல்லி, சண்டிகர், இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி ஆகிய இடங்களில் பதுங்கியிருந்த அவர் சத்தீஸ்கருக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

அங்கு மறைந்திருந்த அவரைத் தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்