புதுடெல்லி: இந்தியாவில் தங்குவதற்கான தங்களது விசா காலத்தையும் தாண்டி கூடுதல் நாள்கள் தங்குவதற்கு விரும்பும் வெளிநாட்டினருக்கான பதிவு விதிமுறைகளையும் காலக்கெடுவையும் மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
புதிய விதிகளின்படி, தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட 180 நாள்கள் முடிவடைவதற்கு முன்பே அவர்கள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல், இந்தியாவில் வெளிநாட்டினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான சில பதிவு விதிகளில் தளர்வுகளும் வெளிநாட்டினருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கான புதிய விதிமுறைகளும் இந்த அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
விசா விதிமுறைகளில் மாற்றம்
இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரைக் கண்காணிக்கும் நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்தவும் குடிநுழைவுக் கண்காணிப்பை எளிமையாக்கவும் மத்திய உள்துறை அமைச்சு ‘குடிநுழைவு மற்றும் வெளிநாட்டினர் விதிகள் 2025’ல் இந்தத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
180 நாள்கள் அல்லது அதற்கும் குறைவான விசா காலத்தைக் கொண்ட வெளிநாட்டினர், கூடுதலாக மேலும் சில நாள்கள் இந்தியாவில் தங்க விரும்பினால், தங்களது 180 நாள்கள் முடிவதற்கு முன்பே இணையத் தளத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு முன்பு, இந்தியா வந்து தங்கியிருப்பவர்கள் தங்களுக்கான 180 நாள்கள் கால அவகாசம் முடிந்தபிறகு, அடுத்த 14 நாள்களுக்குள் வெளிநாட்டினர் தங்களைப் பதிவு செய்ய அவகாசம் இருந்தது. இனி அந்த அவகாசம் கிடையாது.
திங்கட்கிழமை (ஜூன் 1) வெளியான அறிவிப்பின்படி, “180 நாள்கள் முடிந்தபின்னர் 14 நாட்களுக்குள்” என்ற பழைய நிபந்தனை நீக்கப்பட்டு, “180 நாட்கள் முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும்” பதிவு செய்யலாம் என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
மேலும், அவசர, தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டுமே இந்த விசா நீட்டிப்பு அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டினர் குழந்தைகளுக்கான புதிய பிறப்புப் பதிவு விதிமுறைகள்
இந்தியாவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கான விதிகளில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவருமே வெளிநாட்டினராக இருந்தால், புதிய விசா அல்லது வெளியேறும் அனுமதி பெற 30 நாள்களுக்குள் மொபைல் ஆப் அல்லது இணையத்தளம் மூலம் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்து, குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை மட்டுமே போதும் என நினைத்தால், இந்த 30 நாள் கட்டாயப் பதிவு விதிமுறை கிடையாது.
அந்தக் குழந்தை இந்தியாவில் வாழும்போதே பிற்காலத்தில் வேறு ஏதேனும் நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அந்த வெளிநாட்டுக் குடியுரிமை கிடைத்தது குறித்து 30 நாள்களுக்குள் பெற்றோர் அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனைகள், தாதிமை இல்லங்களுக்கு வரும் வெளிநாட்டினரைப் பற்றிய தகவல்களை அரசுக்குத் தெரிவிக்கும் விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

