புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட இப்போதைய டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார். அதேசமயத்தில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) வெளியிட்டது.
அதன்படி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், டெல்லி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்து பாஜகவை பிரதிநிதித்து முன்னாள் டெல்லி முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மாவும் காங்கிரசைப் பிரதிநிதித்து முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் களமிறங்கினர்.
இதில் பாஜகவின் பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்றார்.
வாக்கு எண்ணிக்கையின் கடைசிச் சுற்று முடிவில், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவினார்.
ஜங்புரா தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம், டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி வேட்பாளருமான மணீஷ் சிசோடியா தோல்வியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதிஷி வெற்றி
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி இறுதிக்கட்ட சுற்றுகளின்போது பின்னடைவைச் சந்தித்து தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.