புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் அறிவியல், கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராகத் திகழ்ந்த டாக்டர் கி.கஸ்தூரி ரங்கனின் மறைவுக்கு மிகவும் வருத்தமடைகிறேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்துக்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளரா்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர் என்றும் இதனால் இந்தியாவுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
திரு கே.கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவர் இல்லத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 83.
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக பணியாற்றிய அவருக்கு, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.

