அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை (மே 1) காலை மூண்ட தீயில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தீ மூண்டதாகவும் ஒருசில நிமிடங்களுக்குள்ளாக ஹோட்டல் நாஸ் தீயால் சூழப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
ஹோட்டலில் இருந்தோர் தீக்கு அஞ்சி, உயிர் தப்புவதற்காகக் கீழே குதித்ததாகக் கூறப்பட்டது.
தீச்சம்பவத்தில் ஆடவர் இருவர், ஒரு பெண், நான்கு வயதுக் குழந்தை என நால்வர் மாண்டுவிட்டனர். அவர்கள் தீக்காயங்களாலும் மூச்சுத் திணறலாலும் மாண்டதாக ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் சமாரியா தெரிவித்தார்.
மாது ஒருவர் தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக மூன்றாவது மாடி அறையின் சன்னல் வழியாகக் கீழே வீசியதாகவும் அந்தக் குழந்தைக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஊடகங்களில் வெளியான படங்களில் ஹோட்டலைக் கரும்புகை சூழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
சம்பவத்தின்போது அந்த ஹோட்டலில் 18 பேர் தங்கியிருந்தனர். அவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு டெல்லியிலிருந்து அஜ்மீர் வந்தவர்கள்.
சம்பவத்தில் எட்டுப் பேருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மின்கோளாற்றால் தீ மூண்டதாகத் தெரிகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலத்த வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாகக் கூறினர். தீ மூண்டதற்கு முன்பு குளிரூட்டி வெடித்ததாகக் கூறப்பட்டது. அது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

