நான்கு மீனவர் சடலங்கள் ஆந்திராவில் கரை ஒதுங்கின

நான்கு மீனவர் சடலங்கள் ஆந்திராவில் கரை ஒதுங்கின

படம்: பிடிஐ

05 Nov 2026 - 9:26 pm

2 mins read

சென்னை: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது தமிழக மீனவர்களில் நால்வர் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் ஆந்திராவில் கரை ஒதுங்கியன.

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் வியாழக்கிழமை (அக்டோபர் 29) ஒன்பது மீனவர்கள் விசைப்படகில் நடுகடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அந்தப் படகில், காசிமேட்டைச் சேர்ந்த படகு ஓட்டுநர் சூர்யா 49, குப்பன் 48, மோகன் 47, ராஜேஷ் 52, முருகன் 48, குப்புசாமி 58, விஜயகாந்த் 44, அரவிந்த் 40, கடலூரைச் சேர்ந்த நாராயணன், 57, ஆகியோர் சென்றனர்.

முரசு புயல் தொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் அவர்கள் தங்களது படகைப் பாதுகாப்பாக நிறுத்தினர்.

பின்னர், திங்கட்கிழமை (நவம்பர் 2) ஆந்திரத்தின் ராமாயப்பட்டினம் துறைமுகம் நோக்கி அவர்கள் புறப்பட்டனர்.

அப்போது அவர்களது விசைப்படகின் இயந்திரம் பழுதாகிவிட்டது. அதுதொடர்பாக ஆந்திரக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவரின் படகிலுள்ள வாக்கி டாக்கிக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பிறகு காசிமேடு மீனவர்கள் சென்ற படகிலிருந்து எந்தத் தகவலும் கிடைக்காததைத் தொடர்ந்து, படகின் உரிமையாளர் செல்வழகன் காசிமேடு மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் கொடுத்தார்.

உடனடியாக இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் அருகே நான்கு தமிழக மீனவர்களின் சடலங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 5) கரை ஒதுங்கின.

அந்தத் தகவலை அறிந்த தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்தனர்.

மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் காசிமேடு வட்டாரம் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

எஞ்சிய ஐந்து மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று பிரகாசம் மாவட்ட ஆட்சியர் பி ராஜபாபு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்