பெலகாவி: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குளிர்பதனப் பெட்டி வெடித்ததில், அதற்கு அருகே உறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.
பாரதி தாமோனே (50), சாரதா தாமோனே (45), கங்கா தாமோனே (25), பிரியா தாமோனே (24) ஆகிய பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கஜனன் தாமோனே (65), ரோஷன் தாமோனே (21) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாரதா, கஜனனின் மனைவி; பாரதி தாமோனே அவரது சகோதரி ஆவார். பிரியா மற்றும் கங்கா, கஜானன்-சாரதா தம்பதியரின் மகள்கள்; ரோஷன் அவர்களின் மகன் ஆவார்.
அந்தக் குடும்பத்தினர், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாவத் கல்லியில் உள்ள தங்களது வீட்டில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலையை விளக்குகளால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பண்டிகை கொண்டாட்டங்களை முடித்துவிட்டு நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.
குளிர்பதனப் பெட்டி அருகில் அவர்கள் உறங்கியபோது அதிகாலை 2.15 மணியளவில் திடீரென்று அந்தப் பெட்டி வெடித்தது. பலத்த சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் பதற்றத்துடன் ஓடிச்சென்று பார்த்தபோது வீட்டில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
அவர்களால் கஜனனையும் ரோஷனையும் மீட்க முடிந்தது. ஆனால், மற்றவர்கள் தீயில் கருகிவிட்டனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நகரில் நடைபெற்று வந்ததால், குளிர்பதனப் பெட்டி வெடித்த சத்தத்தை அக்கம்பக்கத்தினர் முதலில் பட்டாசு வெடிப்பதாகவே நினைத்தனர்.
ஆனால், சில நிமிடங்களிலேயே வீட்டிலிருந்து புகைமூட்டமும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மீட்புப் பணிக்காக விரைந்து ஓடினர்.
