புதுடெல்லி: போர் விமானத்திற்கான 120 கிலோ நியூட்டன் திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கும் இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.
இவ்வாண்டுக்கான சுதந்திர தின உரையின்போது, உள்நாட்டு போர் விமான இன்ஜினை மேம்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி கூறினார்.
அதேபோல, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், விரைவில் போர் விமான இன்ஜின்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் கீழ் உள்ள எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிலையமும் பிரான்சின் சப்ரான் நிறுவனமும் இணைந்து நடுத்தர போர் விமானத்திற்கான இன்ஜினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு முயற்சிக்கும் விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், 12 ஆண்டு கால அவகாசத்துக்குள் 120 கிலோ நியூட்டன் திறனுடன் உற்பத்தி செய்யப்படும் இன்ஜின்களை 140 கிலோ நியூட்டன் திறனாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான இன்ஜின்கள் இந்திய அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு விதிகளின் கீழ் தயார் செய்யப்பட உள்ளன. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.