புதுடெல்லி: இந்திய விமானப் படைக்கு 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அவற்றுள் 94 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 3.25 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தின்கீழ் கடந்த மே மாதம் இந்தியா முக்கியமான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை ஒன்றை பிரான்ஸ் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்த முன்மொழிவு இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் கொள்முதல் பிரிவு, இந்திய விமானப்படையின் தீவிர பரிசீலனையில் உள்ளது.
‘மேக் இன் இந்தியா’
மொத்தம் உள்ள 114 விமானங்களில், 94 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளூர் தொழில் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அதிநவீன போர் விமானத் தயாரிப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு ஏவுகணைகள் மற்றும் ஆயுத அமைப்புகளை இந்த ரஃபேல் விமானங்களில் ஒருங்கிணைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


