தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு மில்லியன் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி: அஸ்வினி வை‌ஷ்ணவ்

2 mins read
271e4d13-f1ed-46a4-a473-38fa7733d6f3
‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் அறிவிப்பு இடம்பெற்றது. - மாதிரிப்படம்: investindia.gov.in / இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு இலவசமாக செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயிற்சி வழங்கப்படும் என்றும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வை‌ஷ்ணவ் அறிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் உள்ள யா‌ஷோபூமி மாநாட்டு நிலையத்தில் ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் திரு வைஷ்ணவ் பேசினார்.

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சின்கீழ் வரும் ‘காமன்வெல்த் சர்விஸ் சென்டர் இ-கவர்னன்ஸ் சர்விசஸ் இந்தியா லிமிடெட்’ (சிஎஸ்சி எஸ்பிவி) அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெரிய அளவில் மின்னிலக்கமயமாகிவிட்டதாக மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

கொண்டாட்ட நிகழ்ச்சியில் மின்னணு, தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் ஜித்தின் பிரசாதாவும் கலந்துகொண்டார்.

“நாம் இப்போது செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இருக்கிறோம், (செயற்கை நுண்ணறிவு) இப்போது வெகு விரைவில் வளர்ந்துவருகிறது. காலப்போக்கில் நாம் புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தவேண்டும்,” என்று திரு பிரசாதா குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தை 2015ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். நாட்டின் எல்லா பகுதிகளையும் தொழில்நுட்ப அம்சங்களைச் சென்றடையச் செய்வது இயக்கத்தின் இலக்காகும்.

‘மின்னிலக்க இந்தியா’ கடந்த 10 ஆண்டுகளில் மின்னிலக்க அம்சங்கள் தொடர்பிலான குறைபாடுகளைச் சரிசெய்து ஆளுமை முறையை உருமாற்றியுள்ளது, நிதி சார்ந்த அம்சங்களில் அனைவரையும் உள்ளடக்கியிருக்கிறது, இணையச் சேவைகள் அனைவரையும் சென்றடைய வகைசெய்துள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கம் இந்தியாவை உலகின் மூன்றாவது ஆகப் பெரிய மின்னிலக்கப் பொருளியலாக உருவெடுக்கச் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்