புனே: இந்திய தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாநகராட்சியில் நடக்க உள்ள தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இலவச கார், தங்கம், தாய்லாந்து சுற்றுலா எனப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
அங்குள்ள லோகோன் என்ற வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவர், தாம் வெற்றி பெற்றால் 10 வாக்காளர்களுக்கு குலுக்கல் முறையில் தலா 1,100 சதுர அடி உள்ள நிலத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
விமன் நகரில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள், வாக்காளர்கள் சிலரைத் தேர்வு செய்து ஐந்து நாள்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் மற்ற சில வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் சொகுசுக் கார்கள், இரு சக்கர வானங்கள், தங்க நகைகள் வழங்கப்படும் என தெரிவித்து இருப்பது வாக்காளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.
பெண்களைக் கவரும் வகையில் தங்கம், வெள்ளிச் சரிகையால் நெய்யப்பட்ட சேலைகள், தையல் இயந்திரங்கள், மிதி வண்டிகளைக் கொடுப்பதாக சிலர் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
மேலும், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களைக் கவரும் வகையில் ஒரு லட்சம் பரிசுத்தொகை உள்ள போட்டிகள் நடத்தப்படும் என்றும் இலவச விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும் என்றும் மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

