சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மாநில வாக்காளர்களைக் கவரும் நோக்கில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
பெண்கள், இளையர்கள், விவசாயிகள், மூத்த குடிமக்கள், நுகர்வோர் முதல் கோடீசுவரர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் குறிவைத்து அரசுத் திட்டங்கள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மகளிர் மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டத்தின்கீழ், தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினச் சமூகப் பெண்களுக்கு ரூ.1,500ம் நேரடிப் பணப்பரிமாற்றமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 68 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மூத்த குடிமக்களுக்காக இலவச ஆன்மிகப் பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இளையர்களைக் கவரும் வகையில், மாநிலத்தின் வரலாறு, கலாசாரத்தை மையமாகக் கொண்டு ‘பஞ்சாப் தா கோடிபதி’ என்ற மாநில அளவிலான வினாடி-வினா போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது.
மேலும், கிராமப்புற இளையர்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் வகையில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் ஏராளமான விளையாட்டுத் திடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மின் நுகர்வோர்க்கு நிவாரணம் வழங்கும் விதமாக, 300 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதுடன், நிலுவைக் கட்டணங்களில் அபராதம், வட்டி ஆகியவற்றுக்கு 100 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கோடீசுவரர்கள் முதல் சாமானியர்கள் வரை லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைய உள்ளதாக ஆளும் தரப்பு கூறிவருகிறது.
