புதுடெல்லி: சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் திருத்தப்பட்ட திட்டம் வரும் மாா்ச்சில் நடப்புக்கு வர உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம் சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் கடந்த ஆண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. பின்னா், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், விபத்து நடந்த நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று செவ்வாய்க்கிழமை அவர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து வகை சாலைகளில் நடைபெறும் எல்லா விபத்துகளுக்கும் பொருந்தும் இந்தத் திட்டத்தை காவல்துறை, மருத்துவமனைகள், மாநில சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும் என்றாா்.
விபத்துக்குப் பிறகு முதல் ஏழு நாட்களுக்கு (அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்) மருத்துவச் செலவுகளுக்கு இந்தத் திட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.
விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் இந்த வசதி அமலுக்கு வருகிறது. புதிய திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளில் இடித்து விட்டுச் செல்லும் வழக்குகளில், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
42வது போக்குவரத்து மேம்பாட்டுக் குழு, மாநிலப் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கட்கரி பேசினார்.
சாலைப் பாதுகாப்பு அமைச்சின் முதன்மையான முன்னுரிமை என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024ல் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களில், 30,000 பேர் ஹெல்மெட் விதிகளுக்கு இணங்காததால் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 66 விழுக்காட்டினர் 18-34 வயதுக்குட்பட்டவர்கள்.
கடந்த ஆண்டு 3,000 பேர் உரிமம் பெறாத வாகன ஓட்டிகளால் விபத்துக்குள்ளாகினர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கட்காரி கூறினார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.
பழைய வாகனங்களை ரத்து செய்வதால் ஏற்படும் நன்மைகள், ஆட்டோமொபைல் துறை மேம்பாடு போன்றவை குறித்தும் அவர் பேசினார்.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையானது உலகின் மூன்றாவது இடத்துக்கு வளர்ந்துள்ளது என்ற கட்காரி, 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் அளவு ரூ.7 லட்சம் கோடியிலிருந்து ரூ.22 லட்சம் கோடியாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.