மணிப்பூரில் மீண்டும் கொந்தளிப்பு: மக்கள் போராட்டத்தில் தடியடி

மணிப்பூரில் மீண்டும் கொந்தளிப்பு: மக்கள் போராட்டத்தில் தடியடி

1 of 2
படம்: மாலை மலர்
கோப்புப் படம்: நேஷன் பாத் இந்தியா

02 Nov 2026 - 5:06 pm

1 mins read

இம்பால்: மணிப்பூரில் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 29) காணாமல்போன இரு இளையர்களின் சிதைக்கப்பட்ட சடலங்கள் சாக்குப்பைகளில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.

காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த டி. சோங்லாய் (21), பாவோகின்லால் ஹாங் சிங் (20) ஆகிய இரு குக்கி சமூக இளையர்கள் கடந்த வாரம் திடீரெனக் காணாமல் போயினர்.

அதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிரத் தேடுதல் வேட்டையில், சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் சாக்குப் பைகளுக்குள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

இளையர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவியதும், காங்போக்பி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கொலையில் கிளர்ச்சியாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். அதில் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையே தொடர்ந்துவரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து இன்றளவும் நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கடத்தல், படுகொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

குறிப்புச் சொற்கள்