புதுடெல்லி: எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில்கொண்டு, வழக்கு விசாரணைகளை இணையம் வாயிலாக நடத்த முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களையும் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பெரும்பாலான நீதிமன்றங்கள் அவ்வாறு நடத்தத் தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஏற்கெனவே தலைமை நீதிபதிகளிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானோர் இதனை நடைமுறைப்படுத்தி விட்டனர். இது, நாட்டின் நலன் கருதி தாமாக முன்வந்து மேற்கொள்ளவேண்டிய ஒரு நடவடிக்கை,” என்று அவர் வியாழக்கிழமை (மே 21) ஒரு மனு மீதான விசாரணையின்போது குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இணையம்வழி விசாரணைக்கு மாறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீதான விசாரணையின்போது நீதிபதி அவ்வாறு கூறினார்.
மேற்கு ஆசிய மோதல் காரணமாக எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையம் வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணைகளை நடத்தும் என்று சூர்யகாந்த கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். தேவையற்ற செலவுகளைக் குறைக்குமாறு அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதையடுத்து உச்ச நீதிமன்றம் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

