புதுடெல்லி: ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை (மார்ச் 26) பிரான்ஸ் சென்றுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பது, அனைத்துலக வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு உதவுவது போன்ற அம்சங்கள் குறித்து இந்த அமைச்சர் நிலை மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர்நிலை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஜி7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், தற்போதைய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் பிரான்சின் அழைப்பை ஏற்று இந்தியா அதில் பங்கேற்கிறது.
பிரான்சில் மாா்ச் 26, 27ஆம் தேதிகளில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ஜெய்சங்கர், இதர நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்த்து சவூதி அரேபியா, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான வழிவகைகளை ஆராய்வதும், கடல்சார் வணிகப் பாதைகளை மீண்டும் திறப்பதும் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும், ஈரானின் அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வோர் விவாதிக்க உள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் நீடித்தால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

