தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுடெல்லியில் போலிக் குற்றத்தடுப்பு அமைப்பை நடத்திய கும்பல் கைது

1 mins read
6a6d9d32-f213-4c50-9780-0f6c0b5d0c0e
புதுடெல்லியில் போலிக் காவல்துறை அதிகாரிகள் மக்களை மிரட்டிப் பணம் பெற்றதாகவும் கூறப்பட்டது (ஆகஸ்ட் 10). - கோப்புப் படம்: சாவ்பாவ்

புதுடெல்லி: இந்தியக் காவல்துறை, தலைநகர் புதுடெல்லியில் சட்டவிரோதமாகக் குற்றப் புலனாய்வு அமைப்பொன்றை நடத்திவந்த போலிக் காவல்துறையினரைக் கைதுசெய்துள்ளது.

போலி அதிகாரிகள், மக்களை மிரட்டி “நன்கொடைகள்” பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

புதுடெல்லியின் துணை நகரான நொய்டாவில் காவல்துறையினரைப் போன்று வேடமிட்டிருந்த ஆறு ஆடவர்கள் பிடிபட்டனர். அவர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட அலுவலகமொன்றை “அனைத்துலகக் காவல்துறை, குற்றப் புலனாய்வு அமைப்பு” என்ற பெயரில் நடத்திவந்ததாகவும் அங்கு அவர்கள் காவல் அதிகாரிகளைப் போல் செயல்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையின் வண்ணங்களையும் சின்னங்களையும் கொண்டு போலி அலுவலகம் செயல்பட்டது. இந்தியக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

போலி ஆவணங்களையும் சான்றிதழ்களையும் கொண்டு இணையத்தளமொன்றையும் சந்தேக நபர்கள் நடத்திவந்தனர்.

அனைத்துலகக் காவல்துறை அமைப்பான இன்டர்போலுடனும் உலகின் மற்றக் குற்றத்தடுப்பு அமைப்புகளுடனும் தங்களுக்குத் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் கூறிக்கொண்டனர்.

பொதுச் சேவை அதிகாரிகளைப் போல் அவர்கள் காட்டிக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. கைப்பேசிகள், காசோலைகள், முத்திரை அச்சுகள், அடையாள அட்டைகள் முதலியவை சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லி அருகே வாடகை வீடொன்றில் போலித் தூதரகமொன்றை நடத்திய சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட ஒருசில வாரங்களில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக “மேற்கு ஆர்க்டிக் தூதரகம்” எனும் பெயரில் வேலை தேடுவோருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் மக்களிடம் பணம் பறித்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்