அகமதாபாத்: தனது இளைய மகனின் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் அதானி குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி.
இந்த நன்கொடையின் பெரும்பாலான தொகை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் கட்டுவதற்காக வழங்கப்பட உள்ளது.
“மக்கள் அனைவருக்கும் குறைவான செலவில் உலகத் தரத்திற்கு ஈடாக மருத்துவ வசதியும் கல்வியும் கிடைக்கவேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் தனது முக்கிய இலக்கு,” என்று கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானிக்கும் சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவாவுக்கும் அகமதாபாத்தில் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த திருமணத்திற்கு முன்னதாக கௌதம் அதானியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மங்கள் சேவா’ திட்டத்தின்படி, ஜீத் அதானி-திவா தம்பதியர் ஆண்டுதோறும் திருமணமாகும் 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.