மரபணு மாற்றுப் பொருள்களுக்கு அனுமதியில்லை: பியூஷ் கோயல் உறுதி

மரபணு மாற்றுப் பொருள்களுக்கு அனுமதியில்லை: பியூஷ் கோயல் உறுதி

படம்: ஏஎன்ஐ

04 Nov 2026 - 6:04 pm

2 mins read

புதுடெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், மரபணு மாற்றப்பட்ட பொருள்கள், கன்று இறைச்சி கொண்டு தயாரிக்கப்படும் பால் பொருள்களின் இறக்குமதியை இந்தியா அனுமதிக்காது என இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் சமய உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளிக்கிறது எனச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) புதுடெல்லி கிரோரி மால் கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர் கூறினார்.

வெளிநாடுகளில் பால் பொருள்கள் தயாரிப்பில் கன்று இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் அவற்றுக்கு எதிராகக் கடுமையான சான்றிதழ் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்திய விதிமுறைகள் வர்த்தகத் தடையாக இருப்பதாகக் கூறி அமெரிக்கா நெருக்குதல் அளித்து வருகிறது. இந்திய விதிமுறைகள் கடுமையானவை என அந்நாட்டின் வர்த்தகப் பிரதிநிதி அமைப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சாடியிருந்தது.

மற்றொருபுறம், சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் ஏற்றுமதிக்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் சீனா கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு கோயல், சீனாவின் இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பல நாடுகள் அடிபணியக்கூடும்; ஆனால் இந்தியா தலைவணங்காது என்றார்.

மேலும், சீனா இயந்திரங்களை வழங்க மறுத்தால், அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வோம் என அவர் கூறினார்.

“அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியபோதும் இந்தியா கையேந்தவில்லை. மாறாக, நம் நாட்டில் இருக்கும் வளங்களைக் கொண்டே மோட்டார்களைத் தயாரிக்கப் புதிதாகக் தொடங்கிய நிறுவனங்களை ஊக்குவித்தது,” என இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் சுட்டினார்.

மும்பை–அகமதாபாத் இடையிலான 508 கி.மீ புல்லட் ரயில் திட்டத்திற்கும் அதிலுள்ள 7 கி.மீ நீள கடலடிச் சுரங்கப் பாதைக்கும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மிக இன்றியமையாதவை.

மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் வழக்கமான வெடிவைத்துத் தகர்க்கும் முறைகள் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், இயந்திரங்களே பாதுகாப்பான பணிகளுக்கு வழிவகுக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்