புதுடெல்லி: ஜெர்மனியில் திறமைவாய்ந்த பணியாளர் இடைவெளியை நிரப்பும் நடவடிக்கையில் இந்தியாவை அந்நாடு முக்கியக் கூட்டாளியாகக் கருதுவதாக இந்தியாவுக்கான ஜெர்மானியத் தூதர் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் ஜெர்மனியில் தங்களுக்காகக் காத்திருக்கும் நல்ல வாய்ப்புகளை ஆராய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா ‘ஹெச்-1பி’ விசாவுக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ள நிலையில், ஜெர்மனி விடுத்துள்ள இந்த அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தேவை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அக்கர்மன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்திய நிபுணர்களைத் தங்கள் நாடு வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியர்கள் ஜெர்மனியில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டிய அவர், அங்கு அதிக வருமானம் ஈட்டுபவர்களில் இந்தியர்களும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜெர்மானியர்களைவிட இந்தியர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று இந்தியா, பூட்டானுக்கான ஜெர்மானியத் தூதர் பிலிப் அக்கர்மன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு காணொளிப் பதிவில் சுட்டியுள்ளார். இது மிகவும் நல்ல செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது அதிக சம்பளத்தை மட்டுமல்ல, இந்திய நிபுணர்கள் ஜெர்மனியின் வளர்ச்சியில் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கையும் பிரதிபலிக்கிறது. அதிக சம்பளம் என்பது இந்தியர்கள் சமூகத்திற்கும் ஜெர்மனியின் நலனுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
“ஐரோப்பாவின் பொருளியல் சக்தியாக பெரும்பாலும் பார்க்கப்படும் ஜெர்மனி, அதன் இடம்பெயர்வு முறையைத் தெளிவானதாகவும் நம்பகமானதாகவும் வடிவமைத்துள்ளது,” என்றார் அக்கர்மன்.
தொடர்புடைய செய்திகள்
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளியலில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்திய நிபுணர்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் பணி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி அத்தகைய நிபுணர்களுக்கு ஏற்ற தேர்வாக மாறி வருகிறது என்று அக்கர்மன் கூறியுள்ளார்.
“ஜெர்மனி இடம்பெயர்வுக் கொள்கை ஒரு ஜெர்மன் காரைப் போலவே செயல்படுகிறது. இது நம்பகமானது, இது நவீனமானது, இது கணிக்கக்கூடியது. இது ஒரு நேர்க்கோட்டில் செல்லும்,” என்றும் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.