உலகளாவிய உணவு நெருக்கடி: எச்சரிக்கும் ஜெய்சங்கர்

உலகளாவிய உணவு நெருக்கடி: எச்சரிக்கும் ஜெய்சங்கர்

படம்: தி இந்து

30 Sep 2026 - 5:22 pm

2 mins read

புதுடெல்லி: அடுத்து வரும் மாதங்களில் உலக அளவில் கடுமையான உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ‘ஏசியா சொசைட்டி’ அமைப்பின் நிகழ்வில் உரையாற்றிய அவர், உலக அளவில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்களால் உலகப் பொருளியல் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

உலகின் வல்லரசு நாடுகளும் கொள்கை வகுப்பாளர்களும் எடுக்கும் சுயநல முடிவுகளே இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உக்ரேன் போர், மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும் கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதியும் மத்திய கிழக்கு ரஷ்யாவில் நடைபெறும் உர உற்பத்தியும் நிலைகுத்திப் போயுள்ளதாகவும் திரு ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

“ஒரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் முடிவுகளால் பிற நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ‘வாழ்க்கையை கடினமாக்குவது எங்கள் நோக்கமல்ல’ என்று கூறிவிட்டு தங்களின் பொறுப்பிலிருந்து அவர்கள் தப்பித்துவிட முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

‘சூப்பர் எல் நினோ’ போன்ற தீவிர காலநிலை மாற்றங்களும் சேரும்போது, உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு கட்டுக்கடங்காமல் போகக்கூடும் என அவர் அச்சம் தெரிவித்தார்.

எரிபொருள் சந்தைகளில் அரசியல் கலப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், சுயநலப் போக்கில் முடிவெடுக்கும் வல்லரசு நாடுகள், தங்கள் முடிவுகளால் வளர்ந்து வரும் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்க முடியாது என்றார்.

நிதி நெருக்கடியால் முதலீடுகள் அனைத்தும் பாதுகாப்பான நாடுகளை நோக்கி நகர்வதால், ஏழை நாடுகள் பெரும் நிதிச் சுமையை எதிர்கொள்கின்றன என்றும் போர்கள், பொருளியல் தடைகளால் எழும் இத்தகைய தட்டுப்பாடுகள் இறுதியில் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நெருக்கடிகளைச் சமாளிக்க உலக நாடுகள் சுயநலமின்றி, ஒருங்கிணைந்த புரிதலுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
ஜெய்சங்கர்உக்ரேன்மத்திய கிழக்குபோர்ரஷ்யாஏற்றுமதிஎரிபொருள்