உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவில் நிலவரம் ‘தீவிரம்’

2 mins read
b1a79327-4464-44be-9ff8-77a066b9f3bf
இந்தியா 100க்கு மொத்தம் 27.3 புள்ளிகள் பெற்றுள்ளதால் நாடுகளின் பட்டியலில் அங்குள்ள பட்டினி நிலை ‘தீவிரம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: உலக பட்டினிக் குறியீடு (Global Hunger Index) தொடர்பான பட்டியலில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. இதன்படி, நாட்டின் பட்டினி அளவு ‘தீவிரம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடுகளின் பட்டினி நிலவரத்தை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் பயன்படுத்தும் ஒரு கருவியானது, இந்த உலக பட்டினிக் குறியீடு (ஜிஎச்ஐ).

ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் ஆகிய கூறுகளில் உலகின் 127 நாடுகளது ‘ஜிஎச்ஐ’ புள்ளிகள் கணக்கிடப்பட்டதில் இந்தியாவுக்கு 27.3 புள்ளிகள் கிடைத்திருந்தன.

இதன்படி, ‘தீவிரம்’ என்ற பிரிவின்கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மொத்தம் 42 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

பங்ளாதேஷ், நேப்பாளம், இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் மேம்பட்ட ‘ஜிஎச்ஐ’ புள்ளிகள் பெற்று ‘மிதமான’ பிரிவில் இடம்பிடித்துள்ளன.

இந்த ‘2024 ஜிஎச்ஐ அறிக்கை’ தற்போது 19வது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது. பட்டினி விவகாரத்தைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் இன்னும் பல ஆண்டுகளுக்கு உலகின் ஏழ்மையான நாடுகள் பலவற்றில் பட்டினி அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்பதை இந்த ‘ஜிஎச்ஐ’ எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் 13.7 விழுக்காட்டினருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், ஐந்து வயதுக்கும் குறைந்த சிறாரில் 35.5 விழுக்காட்டினர் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதாகவும், ஐந்து வயதுக்கும் குறைந்த சிறாரில் 18.7 விழுக்காட்டினருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்த எடை உள்ளதாகவும் 2.9 விழுக்காட்டுச் சிறார்கள் தங்களின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பாகவே இறப்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த நான்கு குறிகாட்டிகளின் அடிப்படையில் ஒரு நாட்டில் பட்டினியின் தீவிரம் 100 புள்ளிகளுக்கு எதிராகக் கணக்கிடப்படுகிறது. இதில் 100 புள்ளிகள் பெறுவதே ஆக மோசமான நிலையாகும்.

குறிப்புச் சொற்கள்