பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் ஆர்வம்: ஏரோஸ்பேஸ்

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் ஆர்வம்: ஏரோஸ்பேஸ்

‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை அடுத்து புதிய வணிக வாய்ப்புகள்
படம்: ஏஷியா டைம்ஸ்

23 Oct 2026 - 5:16 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் சக்திவாய்ந்த மீயொலிவேக (சூப்பர்சானிக்) பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு உலகின் பல நாடுகள் பேரார்வம் காட்டி வருவதாக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெய் தீர்த் ராகவேந்திர ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்தியா, ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை, நவீன போர் முறைகளில் தன்னிகரற்ற ஆற்றலை மெய்ப்பித்துள்ளது. ஒலியைவிடக் கிட்டத்தட்ட 2.8 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகள், 2025ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமானப் படைத் தளங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது, எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் துல்லியமாகத் தாக்கி அழித்தன.

அந்த வெற்றிகரமான போர்க்களப் பயன்பாட்டிற்குப் பிறகு, அனைத்துலக தற்காகாப்புச் சந்தையில் பிரம்மோஸ் ஏவுகணைக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பிலிப்பீன்சுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வியட்னாம், இந்தோனீசியா ஆகிய நாடுகளுடனும் விற்பனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று திரு ஜெய் தீர்த் கூறினார். ரஷ்யாவும் இந்த ஏவுகணையைப் பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தற்காப்புத் துறை ஏற்றுமதி 600 மில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, எடை குறைவாகவும் அதிநவீன தொழில்நுட்பத்துடனும் உருவாக்கப்பட்டு வரும் ‘அடுத்த தலைமுறை பிரம்மோஸ்’ (BrahMos-NG) ஏவுகணையின் முதல் மாதிரியானது 2027-2028ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும்.1,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் புதிய ஏவுகணைக்கான வரைவுத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கான பிரம்மோஸ் தீக்கட்டுப்பாட்டு அமைப்பு, ஏவுதளங்களை கொள்முதல் செய்ய இந்தியத் தற்காப்பு அமைச்சு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஏவுகணைதற்காப்புபாகிஸ்தான்தாக்குதல்ஆயுதம்விற்பனைவணிகம்