பானாஜி: கோவா இரவு விடுதி தீவிபத்தையடுத்து, தாய்லாந்துக்கு தப்பியோடிய விடுதி உரிமையாளர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் கோவாவில் இயங்கி வந்த இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதுதொடர்பாக கோவா காவல்துறை மேற்கொண்ட விசாரணை முடிவில் அவ்விடுதி பொது மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியானது. குறிப்பிட்ட அந்த இரவு விடுதி சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாக ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் அளித்த புகாரின் பேரில் இரவு விடுதியை இடிக்குமாறு நீதிமன்றம் ஏற்கெனவே உத்திரவிட்டு இருந்ததும் அதை மீறி விடுதி தொடர்ந்து இயங்கியதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் லூத்ரா சகோதரர்கள் எனக் குறிப்பிடப்படும் இந்த விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டனர். தீ விபத்து நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குள் இருவரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்து சென்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து சௌரவ் லூத்ரா, கௌரவ் லூத்ரா ஆகிய இருவரையும் பிடிக்க சிபிஐ சார்பாக அனைத்துலக காவல் அமைப்பிடம் (இன்டர்போல்) கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இருவரையும் தாய்லாந்து காவல்துறை வியாழக்கிழமை (டிசம்பர் 11) கைது செய்தது.
இதையடுத்து இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரது கடப்பிதழ்களை ரத்து செய்வது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வருகிறது.
தங்களுக்கு பிணை வழங்கக் கோரி லூத்ரா சகோதரர்கள் டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். எனினும் பிணை வழங்க கோவா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

