பானாஜி: கோவா இரவு விடுதியில் மாண்டோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் கருணைத்தொகையை அறிவித்தார்.
அர்போரா பகுதியில் இயங்கி வந்த அந்த இரவு விடுதியில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்; அறுவர் படுகாயமடைந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து விடுதியின் பொது மேலாளர் உட்பட மூன்று ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இரவு விடுதியின் உரிமையாளர்கள், மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2013ஆம் ஆண்டு இரவு விடுதியின் வளாகத்திற்கு வர்த்தக உரிமம் வழங்கியதற்காக அர்போரா - நாவோ பஞ்சாயத்து தலைவரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
தவறு செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீ விபத்து குறித்து குற்றவியல் நடுவர் விசாரணைக்கு முதல்வர் சாவந்த் உத்தரவிட்டுள்ளார். தவிர, மாவட்ட நீதிபதி, காவல்துறை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த பிற அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. சம்பவத்திற்கு வழிவகுத்த நடைமுறைக் குறைபாடு குறித்து ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

