பெங்களூரு: கர்நாடகாவில் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரன்யா ராவின் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 32 வயது ரன்யா ராவ் திங்கட்கிழமை (மார்ச் 10) விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அவரது தரப்பில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
“காவல்துறை அதிகாரிகள் ரன்யாவை உடல் ரீதியாகத் தாக்கவில்லை. ஆனால் உணர்வு ரீதியாகக் காயப்படுத்திவிட்டனர். மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வதற்காகப் பிணை வழங்க வேண்டும்,” என ரன்யாவின் தரப்பு மனுவில் குறிப்பிட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரன்யாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
கர்நாடகக் காவல்துறை ஆணையர் ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா கடந்த 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை செய்தனர். அதில் ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யாவிடம் நடத்திய விசாரணையில், முக்கிய பிரமுகர்கள், நகைக்கடை அதிபர்கள் மற்றும் அனைத்துலக தங்க கடத்தல் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுவரை 45 நாடுகளுக்கு ரன்யா பயணித்துள்ளார். துபாய்க்கு மட்டும் அவர் 27 முறை சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து கடந்த 8ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ரன்யா மீது அனைத்துலக தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் உள்ள காணொளி ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையில் இறங்கி உள்ளனர்.