செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பாலிதீன் பை தயாரிப்புத் தொழிற்சாலையில் திங்கட்கிழமை (29 செப்டம்பர்) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்து எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலையில் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அதிகாலை நேரத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் எந்தவித உயிரிழப்பும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.
இந்தக் கோர விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள பாலிதீன் பைகள், உபகரணங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மறைமலைநகர், மகேந்திராசிட்டி ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை முழுமையாக அணைத்தனர்.