புதுடெல்லி: இந்தியாவில் கூகல் மேப்ஸ் செயலிக்குப் பதிலாக மேப்பில்ஸ் (Mappls) எனும் செயலி பயன்படுத்தப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவின் தகவல், ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மேப்பில்ஸ் செயலியைத் தாம் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளியைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து இந்தப் பேச்சு தலைதூக்கியிருக்கிறது என இந்துஸ்தான் டைம்ஸ் உடகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் தயாராகும் பொருள்களையும் சேவைகளையும் ஊக்குவிக்கும் ஸ்வதேஷி திட்டத்தின்கீழ் இந்த முயற்சி வருவதாக நம்பப்படுகிறது.
தற்போது கூகல் மேப்ஸ்தான் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் இட வழிகாட்டுதல் தளமாகும்.
திரு வைஷ்ணவ் பதிவேற்றம் செய்த காணொளியில் அவர் மேப்பில்ஸ் செயலியின் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்திப் பார்ப்பது தெரிகிறது. மேப்மை இந்தியா நிறுவனம் மேப்பில்ஸ் செயலியை உருவாக்கியிருக்கிறது.
“மேப்மை இந்தியாவின் ஸ்வதேஷி ‘மேப்பில்ஸ்’. நல்ல அம்சங்கள் இதில் உள்ளன. கட்டாயம் பயன்படுத்திப் பார்க்கவேண்டும்,” என்று மத்திய ரயில்வே அமைச்சருமான திரு வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
என்னதான் கூகல் மேப்ஸ் மக்களிடையே பெரிய அளவில் பிரபலமாக இருந்து வந்தாலும் சில பயனர்கள் அதைப் பயன்படுத்தும்போது சிக்கல்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் தங்களுக்குத் தெரியாத தவறான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வுக்குப் போய்க்கொண்டிருந்த ஆடவர் மூவர் பயணம் செய்த கார் ஆற்றில் விழுந்ததால் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அசம்பாவிதம் நிகழ்வதைத் தவிர்க்க, எதிரே பாலம் இருந்தால் அதை ஓட்டுநர்கள் தெரிந்துகொள்ள முப்பரிமாண சாலைச் சந்திப்புச் சித்திரிப்பை தாங்கள் வழங்குவதாக மேப்பில்ஸ் கூறியுள்ளது. செயலிப் பயன்பாடு சிக்கலின்றி இருக்கப் பயனர் திரைச் செயல்பாட்டை (user interface) தாங்கள் எளிமைப்படுத்துவதாகவும் வழிகாட்டுதலை மேம்படுத்த பல்வேறு அம்சங்களைச் சேர்ப்பதாகவும் மேப்பில்ஸ் உறுதியளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, மேப்பில்சில் உள்ள எல்லா வரைபட, பயனர் தகவல்களும் இந்தியாவினுள் மட்டும்தான் சேகரிக்கப்படுகின்றன. அதனால் தகவல் பாதுகாப்பைப் பொறுத்தவரை இது பயனர்களுக்கு நற்செய்தியாகப் பார்க்கப்படுகிறது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியாவிற்குள் ரயில்வே வைழிகாட்டுதல் கட்டமைப்பை மேம்படுத்த இணக்கக் குறிப்பு கையெழுத்தாகவுள்ளது. அந்த வகையில், மேப்பில்ஸ் செயலி, ரயில்வே துறையிலும் பயனுள்ளதாக விளங்கும் ஆற்றல் கொண்டது என திரு வைஷ்ணவ் குறிப்பிட்டார்.