ஜந்தர் மந்தரை மீண்டும் போராட்டக் களமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

ஜந்தர் மந்தரை மீண்டும் போராட்டக் களமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

கோப்புப் படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

15 Nov 2026 - 3:47 pm

2 mins read

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை மீண்டும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான இடமாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய தேசிய ஓய்வூதியத் திட்ட ஊழியர்கள் சங்கம், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தேசியத் தலைவர் மன்ஜீத் சிங் படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

துடிப்பான ஜனநாயகத்தின் ஆன்மாவாக விளங்குவது போராட்டம் நடத்தும் உரிமை என்றும் ஒருசிலரின் அராஜகச் செயல்களுக்காக, சாமானிய மக்களின் அரசியலமைப்பு ரீதியான அமைதிப் போராட்ட உரிமையைப் பறிப்பது முற்றிலும் நியாயமற்றது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை, எளிய மக்கள், அரசு ஊழியர்கள், லட்சக்கணக்கில் பணம் செலவழிக்காமல் தங்களது நியாயமான கோரிக்கைகளையும் துயரங்களையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க தளமாக ஜந்தர் மந்தர் பல்லாண்டுகளாகத் திகழ்ந்து வருகிறது என்று திரு மன்ஜீத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடுவது, இந்தியத் தலைநகரில் சாமானிய மக்களின் குரலை நிரந்தரமாக நசுக்குவதற்குச் சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், போராட்டங்களைக் காரணமாகக் காட்டி வன்முறை, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகள், தனிநபர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைப் போராட்ட இடமாக இருந்ததை நீக்கி அறிவித்ததைத் தொடர்ந்து, ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகியவை மாற்று இடங்களாக அறிவிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்