கௌஹாத்தி: இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பலதார மணம் புரியும் அரசு ஊழியர்கள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
பெண்களின் அதிகாரமளிப்பை உறுதிப்படுத்தவும், பாலின நீதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திருத்தத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது மற்றுமொரு திருமணம் செய்துகொள்ளும் எந்தவொரு அரசு ஊழியரும் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்படுவார்.
அத்துடன், அத்தகைய ஊழியர்கள் எதிர்காலத்தில் மீண்டும் எவ்வித அரசுப் பணிகளிலும் சேருவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
மேலும், அவர்கள் மாநில அரசின் நலத்திட்டப் பலன்களைப் பெறுவதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர்.
இந்த விதிமுறை இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினருக்கும் பாகுபாடின்றி சமமாகப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அசாம் சட்டமன்றத்தொடரில் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது இந்தத் திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
பெண்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் பாதுகாக்கும் நோக்கில் தற்போது இச்சட்டத் திருத்தம் உறுதியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
