ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

1 mins read
62e77a00-7c71-4a15-bd73-edc3db8e8765
2021 பிப்ரவரி 3ல் பெங்களூருவில் தரையிறங்கிய ரஃபேல் விமானத்தின் தோற்றம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியா, ரூ 63,000 கோடி மதிப்பிலான போர் விமானங்களை வாங்குகிறது. இதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்சிடமிருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாத இறுதியில், பிரான்சின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகிறார்.

அப்போது இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாரா தளங்களில் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது கொள்முதல் செய்யப்படும் 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் இந்திய கடற்படைக்கு வழங்கப்படும். முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலிலிருந்து 26 விமானங்களும் இயக்கப்படும்.

தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த்தில் இயக்கப்பட்டு வரும் மிக்-29கே ரக போர் விமானங்கள், தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இருந்து இயக்கப்படவுள்ளன.

மொத்தம் ரூ. 63,000 கோடி மதிப்பில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் மற்றும் நான்கு இரண்டு இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.

ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்