புதுடெல்லி: போர்த்திறன் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை உறுதி செய்வதை ஊக்குவிக்கும் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நான்கு முக்கிய மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடவிருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரபேல் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் இருந்து இந்த ரபேல் விமானங்கள் இயக்கப்படும்.
இதேபோன்று பிரான்ஸ் நாட்டுடன் ரூ.38,000 கோடியில் மேலும் ஒரு பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக மூன்று நவீன நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட உள்ளது.
மும்பையின் மசகான் டாக்ஸில் அந்தக் கப்பல்கள் கட்டப்பட உள்ளன. இந்த மூன்று புதிய கப்பல்களும் 2031ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பிப்ரவரி 11, 12 தேதிகளில் நடைபெறும் ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், இந்த ஒப்பந்தங்கள் முன்கூட்டியே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 156 உள்நாட்டு பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்களும் 307 நவீன பீரங்கித் துப்பாக்கி அமைப்புகளும் வாங்குவதற்கு இரண்டு பெரும் ஒப்பந்தங்கள் இந்த நிதியாண்டின் அதாவது மார்ச் 31ஆம் தேதிக்குள் கையெழுத்தாகவுள்ளன என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.