லக்னோ: மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் உள்ள நீரின் மாசுத்தன்மை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கங்கை நதியின் புனிதத் தன்மை குறித்து, பத்மஸ்ரீ விருது பெற்ற அறிவியல் அறிஞர், முனைவர் அஜய் குமார் சோங்கர் நடத்திய ஆய்வின் முடிவுகளை உத்தரப்பிரதேச அரசு வியாழக்கிழமை (பிப்ரவரி 21) வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மகா கும்பமேளாவில் மக்கள் புனித நீராடும் நீரின் தூய்மை குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
கங்கை-யமுனை நதியின் நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டது.
பாக்டீரியாக்களுடன் பல மாசுக்களும் அந்த நீரில் கலந்திருப்பதால் அது குளிக்கவும் குடிக்கவும் தகுதியற்றது என்றது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
அதிகப்படியான மக்கள் அங்கே குளிக்கின்றனர். அவர்களின் உடலிலும் துணிகளிலும் இருந்து அசுத்தங்கள் வெளியேறுவதால் அந்த நீரில் பாக்டீரியாக்களின் செறிவு அதிகரிக்கிறது என்றும் அது கவலை தெரிவித்திருந்தது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி, அந்த மாநில சட்டமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அறிக்கையை முழுமையாக நிராகரித்தது மட்டுமின்றி, திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று கூறினார்.
இந்நிலையில், கங்கையின் ஐந்து இடங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வு செய்ததில் அதில் ஒரு பாக்டீரியாவும் இல்லை என்று முனைவர் அஜய் குமார் சோங்கர் கூறியுள்ளார்.
அதனை சில நாள்கள் எடுத்து வைத்திருந்த பிறகும் ஆய்வு செய்து பார்த்ததாகவும் அப்போதும் அதில் பாக்டீரியா வளரவில்லை என்றும் கூறியிருந்ததை உ.பி. அரசு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏறக்குறைய 58 கோடி பக்தர்கள் நீராடிய பிறகும் கூட, கங்கை நீர், தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் அதி அற்புத சக்தி கொண்டிருப்பதாகவும் அறிக்கை நிறைவு செய்கிறது.