உத்தராகண்ட்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் ரூபாய் 20 முதல் 80 வரை பசுமை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
வர்த்தக, தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாய், நடுத்தர வாகனங்களுக்கு 60 ரூபாய், கனரக வாகனங்களுக்கு 80 ரூபாய் என்று இணை ஆணையர் (போக்குவரத்து) சனத் குமார் சிங் குறிப்பிட்டார்.
உத்தராகண்டில் பதிவு செய்யப்படாத வாகனங்கள், இம்மாநிலத்திற்குள் வருவதற்கு விரைவில் பசுமை வரி செலுத்த வேண்டும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் டிசம்பர் 7ஆம் தேதி தெரிவித்தார்.
இது இம்மாத இறுதிக்குள் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்கள், மின்சாரம், சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள், உத்தராகண்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள், அவசர சேவை வழங்கும் மருத்துவ சிகிச்சை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இதிலிருந்து விலக்கு பெறுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வாகனங்களின் ‘ஃபாஸ்ட்டேக்ஸ்’வழி வரித்தொகை கழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்திற்குள் வரும் வாகனங்களுக்கு ஒரு நாள் கணக்கில் வரி விதிக்கப்படும்.
ஆண்டு முழுவதும் மற்ற மாநிலங்களிலிருந்து பலர் உத்தராகண்டின் சுற்றுலா இடங்களுக்கும் புனிதத் தலங்களுக்கும் வரும் நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்து இருப்பதாக அறியப்படுகிறது.

