‘காடுகளின் காவலர்’: ஆசியாவின் ஆக வயதான இந்தியப் பெண் யானை உயிரிழப்பு

2 mins read
9bffc27b-fdcd-4f60-9e50-b573b85540bd
வத்சலா 1910களில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. - படம்; எக்ஸ் / டாக்டர் மோகன் யாதவ்

போபால்: ஆசியாவின் ஆக வயதான பெண் யானையான ‘வத்சலா’ செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 8) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது.

அதன் வயது நூறுக்குமேல் இருக்கும் என்றுஅம்மாநில அரசு கூறுகிறது. ஆயினும், அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

வத்சலாவின் இறப்பிற்கு மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் எக்ஸ் ஊடகம் வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வத்சலாவுடனான நூற்றாண்டுகால தோழமை முடிவிற்கு வந்துவிட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் பன்னா புலிகள் காப்பகத்தில் அதன் உயிர் பிரிந்தது. அது வெறும் யானை மட்டுமன்று; காடுகளின் அறியப்படாத காவலர், தலைமுறைகளின் தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். அதன் நினைவுகள் என்றும் எங்கள் உள்ளங்களிலும் இம்மண்ணிலும் நிலைத்திருக்கும்,” என்று திரு யாதவ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காப்பக அதிகாரிகள், ஊழியர்களின் உரிய மரியாதையுடன் ஹினோட்டா யானை முகாமில் வத்சலா எரியூட்டப்பட்டது.

பன்னா புலிகள் காப்பகத்திற்குச் சென்ற பார்வையாளர்கள் வத்சலாவைக் காண்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினர். அங்குள்ள யானைக் கூட்டத்திலேயே ஆக வயதானது என்பதால், புதிய யானைக்கன்றுகளுக்குப் பாட்டிபோல அது திகழ்ந்தது.

முன்னங்கால்களில் ஒன்றில் கால்நகம் உடைந்துபோனதால் அது ஹினோட்டா மலைப்பகுதியில் ஓய்வுபெற்று வந்ததாக அக்காப்பகத்தின் கள இயக்குநர் தெரிவித்தார்.

அதனை நிற்க வைக்க வனத்துறையினர் பெரிதும் முயன்றும் பலனளிக்கவில்லை.

முதுமை காரணமாக வத்சலாவின் கண்பார்வை மங்கிப்போனது என்றும் அதனால் வெகுதொலைவு நடக்க இயலவில்லை என்றும் கூறப்பட்டது. கடந்த 2000ஆவது ஆண்டிலிருந்தே அது தந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தது.

கேரள மாநிலம், நிலம்பூரில் 1910களில் வத்சலா பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 1971ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த யானை, பின்னர் 1993ஆம் ஆண்டு பன்னா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்