புதுடெல்லி: இந்திய குடியரசு தினத்தன்று நடைபெறும் விழாவில் பங்கேற்க இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ புதுடெல்லி சென்றடைந்தார். அவரை இந்திய வெளியுறவு இணையமைச்சர் பபித்ரா மார்கரிட்டா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.
76வது இந்திய குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தோனீசிய அதிபர் திரு. பிரபோவோ சுபியாந்தோ பங்கேற்கிறார்.
இதையடுத்து முதன்முறையாக இந்தியாவுக்கு அலுவல்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் நான்காவது இந்தோனீசிய அதிபர் இவர் ஆவார்.
இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு நிகழ்ச்சிக்காக, இந்தோனீசியாவில் இருந்து 352 பேர் கொண்ட அணிவகுப்பு, இசைக்குழு அதிபருடன் இந்தியா சென்றுள்ளது. இந்தக்குழு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.
இதற்கிடையே, இந்தோனீசிய அதிபர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜனவரி 25) புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய துணை அதிபர் ஜக்தீப் தன்கரையும் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சந்திப்பார்.
இந்தோனீசியாவும் இந்தியாவும் நெருங்கிய வர்த்தக உறவு பாராட்டி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் இந்தோனீசியாவும் கடந்த 2023-24ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 29.4 பில்லியன் டாலரை எட்டியது.