ஹைதராபாத்: தெலுங்கானா, சத்தீஸ்கர் எல்லைப்பகுதியில் நீண்டகாலமாக மாவோயிஸ்டு பிடியில் சிக்கியிருந்த கர்ரிகுட்டா மலைப்பகுதி, தற்போது அமைதிப்பாதைக்குத் திரும்பி, வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெலுங்கானா மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் சத்தீஸ்கர், தெலுங்கானாவும் அடங்கும்.
மாவோயிஸ்ட் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தெலுங்கானா அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அடர்ந்த காடுகளும் பாறைச் சரிவுகளும் மிகுந்த அம்மலைப்பகுதியில் ‘ஆப்பரேஷன் காகர்’ என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2025 ஏப்ரல், மே மாதங்களில் மத்திய-மாநிலப் பாதுகாப்புப் படைகள் இணைந்து 21 நாள்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, 800க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
தற்போது கர்ரிகுட்டா பகுதி முழுவதும் காவல்துறை, துணை ராணுவப் படைகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான மாவோயிஸ்டுகள் சரணடைந்ததையடுத்து, அங்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதி திரும்பியுள்ளதாக டிஜிபி சி.வி. ஆனந்த் கூறியுள்ளார்.
கர்ரிகுட்டா மலைப்பகுதிக்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைதியின் அடையாளமாக வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
புதிய சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், கர்ரிகுட்டா பகுதியைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல், அழகிய சுற்றுலாத்தலமாக மாற்ற தெலுங்கானா அரசு திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு உதவிகளும் நிலம், வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


