புதுடெல்லி: இந்தியாவின் 26வது தலைமைத் தோ்தல் ஆணையராக 61 வயது ஞானேஷ் குமாரும் தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் புதன்கிழமை (பிப்ரவரி 19) பதவியேற்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் பிப்ரவரி 18 அன்று ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானார்.
பொறுப்பேற்ற பிறகு ஞானேஷ் குமார் வெளியிட்ட செய்தியில், “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதல் பணி வாக்களிப்பது. எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும், எப்போதும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஞானேஷ் குமார், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்கம் செய்த மத்திய அரசின் நடவடிக்கையிலும், அயோத்தியில் ராமா் கோயில் அறக்கட்டளையை அமைப்பதிலும் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோ்தல் ஆணையா்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பாக மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் தலைமைத் தோ்தல் ஆணையராவர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பர். இதன்படி ஞானேஷ் குமார் 2029 ஜனவரி 27ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார். இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல், 2026ல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல்கள், 2027ல் இந்திய அதிபர் தேர்தல் ஆகிய தேர்தல்கள் ஞானேஷ் குமார் மேற்பார்வையில் நடைபெறும்.
இந்த நியமனம் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை அறிவித்து இருப்பது ஒழுக்கக்கேடான செயல் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, இந்திய தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் இல்லாதது குறித்து கவலை தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அதன் மீது செல்வாக்கு செலுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கருத்து தெரிவித்தார்.


