புதுடெல்லி: அமெரிக்காவின் எச்-1பி விசாக்களைப் பெறுவதற்கான நேர்காணல்கள், அமர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் இருந்து வருகிறது.
இது குறித்த கவலைகளை இந்திய அரசாங்கம், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளது. விசா தொடர்பான விவகாரங்கள் அவற்றை வழங்கும் நாடுகளின் பொறுப்பு என்று இந்தியா சுட்டியது.
இந்தியர்கள் பலர், விசாவைப் பெறுவதற்கான அமர்வுகளின் தொடர்பில் சிக்கல்களையும் தாமதத்தையும் எதிர்நோக்கி வருவதாக இந்தியா கூறியது என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
“தூதரக அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்வதிலும் அவற்றை வேறு தேதிக்கு மாற்றியமைப்பதிலும் பலர் அதிக காலத்துக்குக் காத்திருக்கவேண்டியிருக்கிறது. இப்பிரச்சினைகள், அவர்களின் குடும்பங்களுக்கு கடினமாக சூழலை ஏற்படுத்தியுள்ளன,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களாக எச்-1பி விசா முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விசா முறையில் மாற்றங்கள் செய்யப்படும்போது இந்தியர்கள்தான் ஆக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாக இருப்பது இதற்குக் காரணம்.
விசா வழங்குவதற்கான சோதனை முறை முடுக்கிவிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.

